கரூர் தொகுதி (காங்கிரஸ்) எம்.பி.யான ஜோதிமணி, இன்று (18 ஆம் தேதி) மாலை கரூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது,
"தனியார் வங்கியான கரூர் லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு, மத்திய நிதியமைச்சகம், வர்த்தகம் தொடர்பான தடை விதித்துள்ளது. கரூரில் நிதி நிறுவனங்களும், பேருந்து, கட்டுமானம், கொசுவலை, ஜவுளி ஏற்றுமதி தொழில்களும் ஒன்றுக்கொன்று ஆதரவாக நின்று வளர்ந்தவை. விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்துறையினரின் பங்களிப்பில்தான் லக்ஷ்மி விலாஸ் வங்கி உருவானது. இதனுடைய இன்றைய நிலை மிகவும் வருத்தமளிக்கிறது. ஜவுளி, கொசுவலை, பேருந்து, லாரி உள்ளிட்ட போக்குவரத்து நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பெருமளவில் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் தான் கணக்கு வைத்துள்ளனர்.
முதலில், ஒரு நாளைக்கு வாடிக்கையாளர்கள் 25,000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 18 ஆம் தேதியான இன்று, வாடிக்கையாளர் வங்கிக்கு சென்றபோது நடப்புக் கணக்குகள் மொத்தமாக முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளான NEFT, RTGS ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு, தவறாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி, வரி விஷயத்தில் மத்திய பா.ஜ.க அரசின் தவறான நடைமுறையால், கரூரில் உள்நாட்டு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, மூடப்பட்டு வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் முக்கிய வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியில், நடப்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள தொழில்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஏற்கனவே, வங்கித் துறையின் மீது பா.ஜ.க மோடி அரசு ஏற்படுத்தியுள்ள அழுத்தம் காரணமாக, நான்கு வங்கிகள் மோசமான நிலையை அடைந்துள்ளன. அதேபோல், மிகவும் மோசமடைந்துள்ள தொழில்துறை மேலும் ஒரு பிரச்சனையை இப்போது எதிர்கொண்டுள்ளது. வங்கிகள் மூலமே தொழில்துறையினர் வரவு செலவு செய்வதாலும், பொருளாதார மந்தநிலை காரணமாகவும், யாரிடமும் ஒரு மாதத்திற்குத் தேவையான கையிருப்பு இல்லை. ஆகவே இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாக மத்திய அரசும், நிதி அமைச்சகமும் விரைவாகத் தலையிட்டு தீர்வு காண்வேன்டும்" என்றார்.