Skip to main content

எட்டு வழிச்சாலைவந்தால் எட்டு பேரை கொல்வேன்! - நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 05/05/2018 | Edited on 05/05/2018

சேலத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தினால் எட்டு பேரை கொன்று விட்டு சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

நடிகர் மன்சூர் அலிகான் நேற்று முன்தினம் (மே 3) சேலம் வந்தார். சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் முயற்சியால் சீரமைக்கப்பட்ட கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியை பரிசலில் சென்று பார்வையிட்டார்.
 

mansoor

 


 மேலும், அவர் திடீரென்று சட்டையைக் கழற்றிவிட்டு வெறும் உடம்புடன் தண்ணீரில் இறங்கி ஏரியில் ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 

 

சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனைக் காண்பதற்காக வந்தேன். இன்றைய தேதியில் காவிரியில் கூட தண்ணீர் இல்லை. கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

சேலத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்வதாலும், எட்டு வழிச்சாலை அமைப்பதாலும் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். நிம்மதியாக வாழ முடியாது.

 

எட்டு வழிச்சாலை திட்டத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. எப்படியும் தடுத்தே ஆக வேண்டும். அதற்கான போராட்டங்கள் நடந்தால் அதில் நானும் கண்டிப்பாக கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைந்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்.

 

கமிஷனை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு நாட்டுக்காரனையும் வா... வா... என்று கூப்பிடுகிறார்கள். அவர்கள் இங்கே வந்து சுரண்டுகிறார்கள். ஏற்கனவே நான்கு வழிச்சாலைகளில் சுங்கச்சாவடி வைத்து கொள்ளை அடிக்கின்றனர். இனிமேல் எட்டு வழிச்சாலை பெயரிலும் இன்னும் கொள்ளை அடிப்பார்கள். நாம் தமிழர் கட்சியும், ஒத்த கருத்துடைய பிற கட்சியினரும் சேர்ந்து அனைத்து சுங்கச் சாவடிகளையும் அடித்து நொறுக்குவோம். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மானக்கேடானது. 

 

இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

 

இதையடுத்து அவர், இரவு 7 மணியளவில் ஓமலூர் அருகே சட்டூர், தும்பிப்பாடி, காமலாபுரம் ஆகிய கிராமங்களுக்குச் சென்றார். அங்கே விமான நிலைய விரிவாக்கத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.

 

எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தினால் எட்டு பேரை கொல்வேன் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்