வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த குடியாத்தம் காந்தி நகரை சேர்ந்த பிரசாத் (வயது 39) என்பவர், என்னுடைய சாவுக்கு ஐ.எப்.எஸ் நிறுவனம் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரசாத் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் நேற்று (03.05.2023) ஒப்படைக்கப்பட்ட நிலையில், குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் பிரசாத் உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரசாத்தின் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளிய ஐ.எப்.எஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து இருந்த நிலையில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்வோம் என போலீசார் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.