திருச்சி புறநகர் பகுதிகளில் ஊரடங்கையும் மதிக்காமல் சுற்றிக்கொண்டிருக்கக் கூடிய வாகன ஓட்டிகளை சோதனைச் சாவடிகளில் நிறுத்தி, அவர்களுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். பின்னர் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு மாஸ்க் வழங்குவதும், மாஸ்க் அணிந்திருந்தாலும் வெளியே பல காரணங்களைச் சொல்லி சுற்றித் திரிபவர்கள் ஒவ்வொருவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுத்து ஆக்சிஜன் தேவையின் அவசியத்தை அனைவரும் புரிந்துகொள்ள வைக்கின்றனர்.
மேலும், இந்த மரங்களை வளர்த்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கும் பணியை தற்போது திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா செயல்படுத்திவருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று (18.05.2021) திருச்சி, புதுக்கோட்டை சாலையில் சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களிடம் அறிவுரை கூறி, முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு முகக் கவசத்தைக் கொடுத்து அனுப்புகின்றனர்.
அதேபோல் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என்பதை சரி பார்த்துவிட்டு ஒவ்வொருவருடைய கையிலும் இலவசமாக மரக்கன்றைக் கொடுத்து அனுப்பிவருகின்றனர். அடுத்த தலைமுறைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த ஊரடங்கை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நேரமாக மாற்றியுள்ளனர் திருச்சி காவல்துறையினர்.