உச்சநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு தண்ணீர் திறந்ததையும், கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு அத்துமீறிச் சென்று வருவதையும் கண்டித்து ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையை வாழ்வாதாரமாகக் கொண்ட தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் கேரளா அரசை கண்டித்து கூடலூர் அருகே உள்ள கேம்பிலிருந்து குமுளியை முற்றுகையிடப் போவதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தெரிய வரவே, உத்தமபாளையம் ஏ.டி.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அதேசமயம், போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார், தடுத்து குமுளிக்குப் போகக் கூடாது என வலியுறுத்தினர். அதனால், விவசாயிகள் கேரளா அரசின் அத்துமீறலைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஏ.டி.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீஸார் விவசாயிகளை குமுளிக்கு செல்லவிடாமல் செய்ததால், ‘தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருந்தால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எங்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்து இருப்பார். ஆனால், ஏ.டி.எஸ்.பி. வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறும் தெரியவில்லை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலைமையும் தெரியாமல் பேருக்குப் பாதுகாப்புக்கு வந்துவிட்டு லேசான சாரல் மழையிலும் நனையக் கூடாது என்பதற்காகத் தான் கொடையைப் பிடிப்பதை விட்டுவிட்டு தனக்குப் பாதுகாப்பாக வந்த போலீசாரை குடைபிடிக்கச் சொன்னது வருத்தமாக இருந்தது’ என்று பேசிக்கொண்டனர்.