இன்று (29.11.2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி, அகில இந்திய ஏழை மக்கள் கட்சி, அமைப்புசாரா தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் 7வது வார்டு வடக்கு கடை காயிதே மில்லத் நகர் மற்றும் மலை அடிவாரம் பகுதியில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதியும் மாநகராட்சி செய்து தந்ததில்லை. குறிப்பாக, இந்தப் பகுதியில் கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. மேலும், இங்கு நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டது. அதுவும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அப்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம்.
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாநகராட்சியைக் கண்டித்து ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மீண்டும் இதேநிலை தொடர்ந்தால், அடுத்த வாரம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இப்பகுதியில் உள்ள பாம்புகள், விஷப் பூச்சிகளை பிடித்து கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.