நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேசுகையில்,''அரசியலமைப்பு சட்டம் தான் நாட்டை வழி நடத்துகிறது. அந்த அரசியலமைப்பு சட்டம் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் குறிப்பிடுவது போல இது ஒரு தேர்தல் திருவிழா அல்ல. இது ஒரு தேர்தல் யுத்தம். ஒவ்வொரு நாளும் நம்முடைய இந்தியா படை முன்னேறிக் கொண்டே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு, அரசியலமைப்பு சட்டம் அமைத்து தந்திருக்கிற அமைப்புகளுக்கு எதிராக, மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக, பாசிச கொள்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு அமைப்பை எதிர்த்து நடத்திக் கொண்டிருக்கிற யுத்தம் இது.
என்னை பொறுத்தமட்டில் 40 தொகுதிகளிலும் நம்முடைய கூட்டணி மகத்தான வெற்றி பெற்று விட்டது. வாக்குகளை பல மடங்கு அதிகரிக்க வேண்டும். எதிர்த்து நிற்கிற பாஜக, அதிமுக கூட்டணிகள் நிராகரிக்கப்பட்டு, வைப்புத் தொகையை இழக்க செய்ய வேண்டும்.
அரசியல் அமைப்புச் சட்டம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை அமைத்து கொடுத்துள்ளது. இந்த அமைப்புகள் எல்லாம் யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகள். ஆனால், இன்றைக்கு சுதந்திரமாக செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது. நாட்டில் வாழுகிற ஒரு கடைக்கோடி மனிதன் பாதிக்கப்பட்டால் அவன் நியாயம் கேட்டு நிற்கிற இடம் நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டது. நீதி மன்றமே ஒருவருடைய கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டால், அப்புறம் நீதி எங்கிருந்து பெறுவது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்க வேண்டும். முடிகிறதா? நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் நீதிமன்றம் சென்று பெறவேண்டியதாயிற்று. மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள தமாகாவுக்கு சைக்கிள் சின்னம், அமமுகவிற்கு குக்கர் சின்னம் கிடைக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் நேர்மையாக செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அபராதம் கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் விடுகிறது.
இந்தியாவில் தன்னைத் தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது பிரச்சாரத்தில் மோடி பேசுகிறார். தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பின்னர் திமுக இருக்காது என்கிறார். இது ஒரு ஜனநாயக விரோதமான செயல். இதே ஆபத்து நாளை அதிமுக, தேமுதிக, பாமகவிற்கு வராதா? நரேந்திர மோடிக்கு 10 வருஷமா கச்சத்தீவு குறித்து ஞாபகமே வரவில்லை. இப்போது கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு என்ன காரணம். இது பிரச்சனைகளை திசை மாற்றி விடுவது தான் காரணம். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக இரண்டு கட்சி எதிர்த்து நிற்கிறது. பாமகவின் சமூக நீதிக்கும் பாஜகவுக்கு என்ன சம்பந்தம். அதிமுக ஆதரவு தரவில்லை. தற்போது உறவில்லை விலகிவிட்டோம் எனக் கூறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக நிராகரிக்கப்பட வேண்டும். பாஜகவிற்கு மூன்றாவது முறை வாய்ப்பு அளித்தால் நாடு அடிமை நாடாக மாறிவிடும் . நாடு முழுவதும் இந்தியா கூட்டணி முன்னேறி வருகிறது'' என்றார்.