Skip to main content

சின்னத்தை மீட்க காட்டிய வேகத்தை மக்கள் பணியில் கட்டவில்லையே: நல்லக்கண்ணு சாடல்

Published on 30/12/2017 | Edited on 30/12/2017
சின்னத்தை மீட்க காட்டிய வேகத்தை மக்கள் பணியில் கட்டவில்லையே: நல்லக்கண்ணு சாடல்

"இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைத்து வகையிலும் வேகம் காட்டியதுபோல், காவிரி நீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட தமிழக உரிமைகளைப் பெறுவதற்கான வேகத்தைக் காட்டத்தவறிவிட்டது அதிமுக அரசு" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு சாடியுள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,

"மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன் மாதம் திறக்கப்பட்டுவது வழக்கம், ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அக்டோபர் மாத இறுதியில்தான் திறக்கப்படுகிறது. அதேநிலைமை நடப்பாண்டிலும் நீடித்ததால், கடைமடை பகுதிகளுக்கு தேவையான அளவு தண்ணீர் பாயவில்லை. எனினும், தாமதமாக வந்த தண்ணீரைப் பயன்படுத்தி சுமார் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு சம்பா சாகுபடி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

பயிரிடப்பட்டுள்ள 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் வரும் பிப்ரவரி வரை தண்ணீர் தேவைப்படும். அதனால் தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசை மத்திய, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறை நீடித்தால், டெல்டா மாவட்டங்களின் பயிர்கள் கருகி பாலைவனமாக மாறிவிடும். மத்தியில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்க் காப்பீடுத் திட்டத்தை, மோடி தலைமையிலான பாஜக அரசு தனியார் நிதி நிறுவனத்திடம் பிரதமமந்திரி புதிய பயிர் காப்பீட்டு திட்டம் என்கிற பெயரில் ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து பெறும் பணத்துக்கு முறையாக கணக்கு வைக்காமல் இழப்பீடுத் தொகை வழங்குவதில் பல குளறுபடிகள் செய்து, விவசாயிகளின் கடன்சுமை அதிகரிக்க செய்துள்ளது.

நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்று அர்த்தத்தோடு கேட்ட அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள், ஆளுநர் ஆட்டுவிப்பதுபோல் நடந்து வருகின்றனர். ஒக்கி புயல் பாதிப்புகளை ஆளுநர் பார்வையிட்டு அறிக்கை தந்த பிறகு, தமிழக முதல்வர் பாதிப்புகளைக் கேட்டறிவது வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று.

தமிழக முதல்வர் கேட்ட நிவாரணத் தொகையைவிட பல மடங்கு குறைவாக வெரும் ரூ.142 கோடி மட்டும் பிரதமர் ஒதுக்கியுள்ளது வேதனையளிக்கிறது. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசு செவிமடுக்க தயங்குகிறது.

காவிரி நதிநீர் பிரச்னையில் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும், மேக்கேதாட்டுவில் தடுப்பணைக் கட்டக் கூடாது, மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு முறை கூடாது, சம்ஸ்கிருதம் திணிப்பு, மத்தியக் கல்வி முறை எதிர்ப்பு என மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் மறைவுக்குபின் அவரது ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா எந்தெந்தத் திட்டங்களை எதிர்த்தாரோ அவற்றையெல்லாம் ஆதரித்து செயல்படுத்திவருகிறார். இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைத்து வகையிலும் வேகம் காட்டியதுபோல், காவிரி நீர் உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக உரிமைகளைப் பெறுவதற்கான வேகத்தைக் காட்டத் தவறிவிட்டது". என்று கூறிமுடித்தார்.

-க.செல்வகுமார் 

சார்ந்த செய்திகள்