Skip to main content

ஐசிஎப் நிறுவனத்தில் அவுட்சோர்சிங் முறையை கைவிடு: அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Published on 28/10/2017 | Edited on 28/10/2017
ஐசிஎப் நிறுவனத்தில் அவுட்சோர்சிங் முறையை கைவிடு: 
அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்



சென்னை, அக். 27- மத்திய அரசு நிறுவனமான இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டி தொழிற்சாலை சென்னை ஐசிஎப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு உலகத் தரத்திற்கு இணையாக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் எல்.எச்.பி. ரயில் பெட்டிகளை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் போட்டுள்ளன. இங்குள்ள எல்.எச்.பி. மற்றும் ஐசிஎப் உற்பத்தி விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை அவுட்சோர்சிங் முறையில் வெளியே கொடுக்கப்படுகின்றன. இதனால் இங்குள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளளது.

இதனைக் கண்டித்து அகில இந்திய ரயில்வே சம்மேளனம், தொமுச, யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு), அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, கார்மிக் சங்கம் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்களின் சார்பில் ஐசிஎப் ஷெல் ஸ்டோர் கேட் அருகே வெள்ளியன்று (அக். 27) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒருங்கிணைப்பாளர் வி.எம்.கிருஷ்ணகுமார் (சிஐடியு) தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொமுச பொருளாளர் வரவேற்றார். ராமலிங்கம், டி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அகில இந்திய டெக்னிக்கல் சூப்ரவைசர் ஊழியர் சங்க இணை பொதுச் செயலாளர் கே.வி.ரமேஷ், பி.மோகந்தாஸ் (ஏஐஆர்எப்), பி.ராஜாராமன் (யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன்), எஸ்.ஆனந்தராஜ் (தொமுச), கே.சுந்தர் (பிஎம்எஸ்), டி.ராஜேந்திரன் (ஏஐடியுசி), சி.லட்சுமிநரசிம்மன் (அண்ணா தொழிற்சங்க பேரவை) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். டி.எம்.செந்தில் (என்.எப்.ஐ.ஆர்) நன்றி கூறினார்.  

செல் மற்றும் பர்னிசிங் மெயின் அசெம்பளி பணிக்கூடங்களிலேயே எல்.எச்.பி. ரயில் பெட்டிகளை மோதுமான அளவு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், செல் பிரிவில் பணிக்கூடம் 10, 13, 15, 16, 18, 20 மற்றும் மேற்கூரை பிரிவில் கூடம் 14, 23, 25, 26இல் ஏற்பட்டுள்ள வேலை இழப்பை ஈடுகட்ட எல்.எச்.பி. ரயில் பெட்டிக்கான பாகங்களை உற்பத்தி செய்யப்பட வேண்டும், 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகவுள்ள புதிய திட்டங்களை ஐசிஎப் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் தொழிர்சங்க பிரதிநிதிகளை ஆலோசித்து அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறையை தனியார்மயமாக்காதே, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இறுதியில் சங்க நிர்வாகிகள் ஐசிஎப் பொதுமேலாளரின் தனிச் செயலாளர் பாபுவை சந்தித்து மனு அளித்தனர். இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

-அசோக்குமார்

சார்ந்த செய்திகள்