நாகை மாவட்டம், திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை எம்.பி. செல்வராசு உள்ளிட்ட அக்கட்சி தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கட்சியின் வளர்ச்சிக்காக வரும் சட்டமன்றத் தேர்தல் செலவினங்களை மேற்கொள்ள திருமருகல் ஒன்றியத்தின் சார்பாக ரூ.2,50,000 நிதியை வழங்கினர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய முத்தரசன் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து தனது பேச்சை துவங்கினார், “ஆடு, மாடுகளை விலை கொடுத்து வாங்குவதுபோல, பாஜக அரசு நினைத்ததை சாதிக்க, மக்களால் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கிவருகிறது. அதுவொரு கொள்ளைக் கூட்டம், அதன் தலைவராக பிரதமர் மோடி செயல்படுகிறார். இப்படி நான் உண்மையைப் பேசுவதால் என் மீது வழக்கு போட்டாலும் கவலையில்லை, நான் பயப்படப்போவதில்லை. சிறைக்குச் சென்றாலும் அங்கேயும் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். அதோட சிறையில் இருந்தால் மோடி ஆட்சியின் அவலங்கள் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பேன். எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் நிம்மதியாக சிறையில் இருப்பேன். ஆனால், சிறையிலும், மோடியை கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் என்றுதான் கூறுவேன்.
ரயிலில் கொள்ளை அடிப்பதையும், பெட்ரோல் டீசலில் கொள்ளை அடிப்பதையும், விலைவாசியை ஏற்றி அடிக்கும் கொள்ளையையும் சொல்வேன்” என தனக்கே உரிய பானியில் கடுமையாக விமர்சித்தார்.