அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசி பேருந்தில் செல்வதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பாக பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வந்தது. அண்மையில் நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பொதுவெளியில் கவனமாக செயல்பட வேண்டும். கழிப்பறை, படுக்கையறையை தவிர மற்ற அனைத்து இடங்களும் பொது இடங்களாகிவிட்டது. எனவே பயன்படுத்தும் வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். பொது இடத்தில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''எப்பொழுது சேகர்பாபு கூட்டம் நடத்தினாலும் ஆண்களைவிட மகளிர் கூட்டம் அதிகமாக இருப்பதை நான் அதிகமாக பார்த்திருக்கிறேன். இங்கு இவ்வளவு சகோதரிகள் வந்திருக்கிறீர்கள். நமது பேச்செல்லாம் இப்பொழுது ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு என்னென்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதைக் கூட தலைவர் என்னை பார்த்து இப்படி எல்லாம் சொல்லாதீங்க, இப்படி எல்லாம் பேசாதீங்க என்று சொன்னார்.
கலோக்கியலா எங்க கடலூர் மாவட்டத்தில் படிக்கும் பொழுது பேசிக் கொள்கிற வார்த்தையை சொன்னதற்காக எவ்வளவு பேர், குறிப்பாக பிஜேபியில் எவ்வளவு பேர் டார்கேட் பண்ணி தாக்கிக் கொண்டிருந்தார்கள். இதற்காக முதல்வர் கூட பல்வேறு அறிவுரைகளை எங்களுக்கு சொன்னார். சகோதரிகள் எல்லாம் நான் சொன்னதை சந்தோஷமாக தான் ஏற்றுக் கொண்டீர்கள். நீங்கள் சொன்ன வார்த்தையைதான் நானும் சொன்னேன். அப்படி யாருடைய மனதாவது புண்பட்டிருக்குமானால் உண்மையிலேயே நான் வருந்துகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை'' என்றார்.