அண்மையில் நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ காட்சி ஒன்று வைரலானது. இதற்கு த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
நடிகையும், பாஜகவின் பொறுப்பாளர்களில் ஒருவரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான மன்சூர் அலிகான் இது குறித்து விளக்கம் அளித்திருந்தார்.
அதற்கு அடுத்த நாளே திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக நடிகர் மன்சூர் அலிகான் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் 'தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வ குணம்' என பதிவிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் மன்சூர் அலிகானிடம் பிரச்சனை தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்டபிறகும் பலர் மீது மான நஷ்டஈடு வழக்கு போட்டுள்ளீர்களே காரணம் என்ன என்ற கேள்விக்கு, ''நான் த்ரிஷாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை. என்னுடைய பி.ஆர்.ஓ வை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'அடக்க நினைத்தால் அடங்க மறு; திரை கதாநாயகி த்ரிஷாவே என்னை மரணித்துவிடு' என்றுதான் சொன்னேன். ஆனால் அவர் மன்னித்துவிடு எனப் புரிந்து கொண்டு வெளியிட்டு விட்டார். அந்த நேரத்தில் மீண்டும் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்து விட்டேன். நான் சொன்னது இதுதான். இந்த அதிர்ச்சியில் இருந்து நானே இன்னும் வெளிவரவில்லை'' என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.