தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். விழாவின் போது மாவட்ட ஆட்சியர், அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினர். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். தேவி சம்பத் என்ற பெண்மணிக்கு இந்த திட்டத்திற்கான முதல் ஏடிஎம் கார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து இந்த திட்டம் குறித்த காணொளி விழாவில் ஒளிபரப்பப்பட்டது. விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டம் குறித்து பேசுகையில், “அண்ணாவை தந்த தாய்மடியாம் கலைமிகு காஞ்சி மாநகருக்கு வந்திருக்கிறேன். என்னுடைய அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம். எல்லாவற்றிகும் சிகரம் வைத்த மாதிரி இருந்தது காஞ்சி மாநகரம். ரொம்ப சின்ன வயதில் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்தி கொண்டேன். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்னுடைய வழக்கம்.
1971 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா துயில் கொண்டிருக்கும் கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து வணங்கி அண்ணா சுடரை கையில் ஏந்தி, அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடர் ஓட்டமாக நானும், என்னுடைய நண்பர்களும் காஞ்சிபுரம் வந்து அப்போது இங்கு நடைபெற்று கொண்டிருந்த திமுக மாநாட்டில் கலைஞரின் கையில் சுடரை ஒப்படைத்தோம். அன்றைக்கு 18 வயதில் அண்ணா சுடரை கையில் ஏந்தி இங்கே வந்த நான், இன்றைக்கு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் எடுத்து வந்த சுயமரியாதை, சமத்துவம், சமுக நீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட தமிழரின் சமுதாயத்தை காக்க கூடிய திராவிட சுடரை ஏந்தி வந்திருக்கிறேன்.
தமிழர் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைக்க இங்கே வந்திருக்கிறேன். இத்திட்டம் தொடங்குவது, அதனை நான் தொடங்கி வைப்பது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேறாக கருதுகிறேன். தாய் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்த பெயர் நீடிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்று அண்ணா கூறினார். அதே போல் இன்றைக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த மு.க. ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பெண்கள் உரிமைத்தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள் ”என பேசினார்.