அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், இன்று (15.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டமானது அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் அதில் குறிப்பாக மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்கக்கூடிய நிதிப் பகிர்வை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வளர்ந்த மாநிலங்கள் என நிதியைக் குறைத்துக் கொடுக்கிறார். இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.எனவே நிதிப் பகிர்வை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''இது தொடர்பாக தற்பொழுது நிதி கமிஷனின் கூட்டம் நடைபெற்றது. இதில் எல்லா கட்சிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. நிதி கமிஷன் எப்படி நிதியைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது வெறும் அரசாங்கத்தின் நடைமுறையாக மட்டும் பார்ப்பதில்லை. நிதி கமிஷன் சென்னை வந்திருந்த பொழுது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்ட அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது. எனவே புதிய நிதி கமிஷன் நிதிப் பகிர்வுகளை அறிவிக்கின்றபோது நிச்சயமாக இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். மாநிலத்தின் முதலமைச்சர் உள்ளிட்ட இவர்களெல்லாம் எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கண்ணு முன்னால் இருக்கின்ற எதார்த்தத்தை கூட புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்.
மழை பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை சின்ன சின்ன இளைஞர்கள் கூட எடுத்து போடுகிறார்கள். ஆனால் அமைச்சர் என்ன சொல்கிறார். எதையும் கேட்பதற்கு தயாராக இல்லை. ஒரு மகாராஜா மனப்பான்மையில் தான் இன்று மாநில அமைச்சர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையை மிக அழகாக திட்டமிட்டு உருவாக்கி சென்றிருக்கிறார்கள். ஆனால் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது குடியிருப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பது, ஆளுங்கட்சி அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ஆக்கிரமிப்புகளை செய்வது நடந்து வருகிறது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட இடங்களில் கூட ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாற்று ஏற்பாடு செய்ய மாட்டேன் என்கிறார்கள். நீர்நிலைகளை கவனிக்காமல் விட்டதன் காரணமாக இன்று மழைக் காலங்களில் அதற்கென்று அதிகமான கோடிகளை செலவழிக்க வேண்டி இருக்கிறது மக்களுடைய வரிப்பணத்தில்'' என்றார்.