மனைவியை துண்டு துண்டாக கொன்று வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பிப்.19 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இந்நிலையில் மூன்றாவது நாளாக போலீசார் சந்தியாவின் தலையை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த 21 ஆம் தேதி சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட வெட்டப்பட்ட கை, கால்களை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திரைப்பட இயக்குனரான பாலகிருஷ்ணனை அவரை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி மூன்று இடங்களில் தனித்தனியாக வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் சந்தியாவின் கழுத்து முதல் இடுப்பு வரையிலான உடல் அடையாறு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அதேசமயம் சந்தியாவை கொலை செய்த அவரது கணவர் பாலகிருஷ்ணன் மீது கொலை மற்றும் கொலை செய்த ஆதரங்களை மறைத்தது போன்ற பிரிவில் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் பாலகிருஷ்ணனனை பிப்.19 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து பாலகிருஷ்ணன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறைக்கு செல்ல வெளியே வந்த பொழுது செய்தியாளர்கள் மத்தியில் சந்தியாவை நான் கொல்லவில்லை என கூறி புதிய திருப்பத்தை கொடுத்தார் பாலகிருஷ்ணன். தலை கிடைத்தால்தான் இந்த வழக்கு நிரூபிக்க முடியும் என்ற பட்சத்தில் சந்தியாவின் தலையை போலீசார் தேடிவருகின்றனர்.
தலை இடது கையுடன் கூடிய உடற்பகுதியை காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்களுடன் பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் கடந்த இரண்டு நாட்களாக தேடிவந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாக பெருங்குடி குப்பை கிடங்கில் மோப்ப நாயுடன் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.