Skip to main content

“பிரதமருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

I condemn the Prime Minister says CM MK Stalin

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘வள்ளலார் - 200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில், சிறப்பு புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள வள்ளலார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் வள்ளலாரின் இறை அனுபவங்கள் என்ற நூலினை வெளியிட்டார். கடலூர் மாவட்டம், வடலூரில் அமைக்கப்படவுள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையினை வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுவின் தலைவரிடம் வழங்கினார். வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு (ம) தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட வள்ளலார் முப்பெரும் விழா தொகுத்து அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சென்னையில் முதன்முதலாக வள்ளலார் நகரை உருவாக்கியவர் முதலமைச்சராக இருந்த கலைஞர். ஆட்சிக்கு வந்ததும் வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகிறோம். வள்ளலாரின் அறிவு ஒளியில் பிளவு சக்திகள் மங்கிப் போவார்கள்.  வள்ளலாரை உயர்த்திப் பிடிப்பது, சிலருக்குப் பிடிக்கவில்லை. பெரியாரையும் போற்றுகிறோம், வள்ளலாரையும் கொண்டாடுகிறார்களே என்பதுதான் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொள்கிறார்கள். கோவில்கள் அனைத்தையும் பொன்போல போற்றிப் பாதுகாக்கிறார்களே, இவர்களை என்ன சொல்லி குற்றம் சாட்டுவது என்று சிலருக்கு குழப்பமாக இருக்கிறது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு, தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வருகை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக் கோவில்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். அவர் மத்தியப் பிரதேசத்திற்கு சென்று பேசினாலும் அந்தமானில் பேசினாலும் தெலங்கானாவில் பேசினாலும் தமிழ்நாட்டைப் பற்றித் தான் பேசுகிறார். அவரால் மறக்க முடியாத மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பகிரங்கமாக அவர் பேசி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமருக்கு நான் எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

I condemn the Prime Minister says CM MK Stalin

 

பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் போய் பேசுவது முறையா? தர்மமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும், வருமானங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யான செய்தியை நாட்டின் பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன. அவர் யாருக்காக பேசுகிறார். யாருடைய குரலை எதிரொலிக்கிறார். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 3,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தவறா. 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவறா.

 

I condemn the Prime Minister says CM MK Stalin

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தவறா. எதைத் தவறு என்கிறார் பிரதமர். பிரதமரின் பார்வையில்தான் தவறு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையும் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற பொதுத் தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம். கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம். அதனால்தான் கருணை வடிவிலான வள்ளலாரைப் போற்றுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

I condemn the Prime Minister says CM MK Stalin

 

இவ்விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர்  ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், மா.கவிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்