காங்கிரஸ் கட்சியில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. பின்னர் கட்சியில் தனக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த விஜயதாரணி தொடர்ந்து தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததோடு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் அங்கு மீண்டும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நடைபெற்ற பாஜக கூட்டம் ஒன்றில் மேடையில் விஜயதாரணி பேசுகையில், ''சில விஷயங்கள் என்னைக் கவர்ந்தால் மட்டுமே அதில் ஈடுபடுவேன். நான் அந்த மாதிரி ஒரு கேரக்டர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் இரண்டரை வருடம் இருக்கிறது. இருப்பதையும் விட்டுவிட்டு பாஜகவில் இருக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லாம் வரல. எதிர்பார்ப்போடு தான் வந்தேன். எல்லோரும் நான் எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தேன் என நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் அது தப்பு. நல்லா உழைக்கவேண்டும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டுபோக வேண்டும் என்று எதிர்பார்ப்போடு வந்திருக்கிறேன். அதற்கு என்ன தேவை? ஏதாவது ஒரு பதவி தேவை. ஆறு மாசம் ஆகிவிட்டது. பிரச்சனையில்லை நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். எல்லோரும் பேசி எனக்கு நல்லது செய்வீங்க. ஆனால் அதேநேரம் நிச்சயமாக என்னைப் போன்றவர்களின் பணியை பாஜக நிச்சயமாக பயன்படுத்தும். அதில் இரு வேறுகருத்து இல்லை. எனக்கு நன்றாக தெரியும். நான் எப்படி பேசுவேன் என்று எல்லோருக்கும் தெரியும். நியாயத்திற்கு மட்டும்தான் நிற்பேன்'' என்றார்.