தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (12/01/2022) மாலை 04.30 மணியளவில் காணொளி மூலம் திறந்து வைத்தார். விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என தமிழில் தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறி தனது உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த 2014- ஆம் ஆண்டு வரை 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரி, பா.ஜ.க. ஆட்சிக்கு பின் 596 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரேநாளில் 9 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்ததே சாதனையாக இருந்தது. மருத்துவக் கல்லூரி திறப்பில் என்னுடைய சாதனைகளை நானே முறியடித்துக் கொண்டிருக்கிறேன்.
மருத்துவப் படிப்புகளை ஊக்கப்படுத்த மத்தியில் இருந்த முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கரோனா உணர்த்தியுள்ளது. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் மருந்துகளுக்கான செலவுத் தொகை குறைந்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளன. சுகாதாரத்துறையில் அதிக அக்கறை செலுத்துவதற்கு கரோனா நோய்த்தொற்று ஒரு முக்கியக் காரணம். தமிழ்மொழி, கலாசாரம் மீது எப்போதுமே எனக்கு ஆச்சரியம் இருக்கும். தமிழ் சார்ந்த படிப்புகளில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் மருத்துவ திட்டங்களுக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரமான மருத்துவம், குறைவான செலவில் சிகிச்சை என்ற இலக்கை நாம் சில ஆண்டுகளில் அடைவோம். குஜராத் மக்களுக்காக குஜராத்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டேன். தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி கல்வியைத்தான் நமது அரசு ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து பொறியியல்துறையில் சாதனை படைத்தவர்கள் அதிகம்" என்று பாராட்டினார்.