புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் உள்ள பெரிய செங்கீரை என்னும் ஊரில் வசித்து வருபவர் ராஜா(30). இவர் வெளிநாட்டில் பொறியாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அபிராமி(29). கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்து, பின்பு நரம்பியல் பிரச்சனைக் காரணமாக உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் அபிராமி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த சூழலில் கணவர் ராஜா ஊருக்கு வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம்(10.12.2024) மனைவி அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த ராஜா யூடியூப்பை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்து உள்ளார். உதவிக்கு ராஜாவின் அம்மாவும் உடன் இருந்துள்ளார். இந்த பிரசவத்தின் போது அபிராமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை சில மணிநேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனிடையே மனைவி அபிராமிக்கு நஞ்சுக் கொடி சரியாக எடுக்காத காரணத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செங்கீரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இறந்த குழந்தையை ராஜா அவரது வீட்டின் அருகே புதைத்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் ஆவுடையார்கோவில் தாசில்தார் தலைமையிலான போலீசார், ராஜா குழிதோண்டிப் புதைத்த அந்த குழந்தையின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜா மற்றும் அவரது அம்மா இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.