தர்மபுரி அருகே, குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள மிட்டாரெட்டிஅள்ளியைச் சேர்ந்தவர் அனுமந்தன் (55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாதம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். அனுமந்தனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். உறவினர்களும், அவர்களின் மகன்களும் பெற்றோரை சேர்த்து வைக்க முயற்சி எடுத்ததை அடுத்து, கடந்த மூன்று மாதமாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனாலும் அனுமந்தன் மது குடிக்கும் பழக்கத்தைக் கைவிடவில்லை.
கடந்த பிப். 27ம் தேதி அன்று இரவு அவர் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து, இரவு அவர்கள் வழக்கம்போல் படுக்கைக்குச் சென்றனர். இந்நிலையில், மறுநாள் காலையில் பார்த்தபோது அனுமந்தன் படுக்கையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். அனுமந்தனின் கால், கை பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் போது அவரை தாக்கியதில் உயிரிழந்தாரா? அல்லது மாரடைப்பில் இறந்தாரா? எனச் சந்தேகித்தனர்.
இதையடுத்து சடலத்தை உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு அறிக்கையில், அனுமந்தன் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமந்தனின் மனைவி, மகன்கள் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.