வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வியாபாரியான அக்பர் (31) என்பவர் கடந்த மாதம் 7 ஆம் தேதியன்று கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இராணிப்பேட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் அக்பர். 31 வயதான இந்த இளைஞர் மாட்டு வியாபாரியாக உள்ளார். சந்தைகளுக்கு மாடுகளை ஏற்றுமதி செய்து வருகிறார். இவருக்கு 27 வயதான ரியானா என்ற மனைவியும், 3 வயது அப்துல் வாஹித் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 7 ஆம் தேதியன்று இராணிப்பேட்டை சந்தை என்பதால் அக்பர் விடியற்காலையே வீட்டிலிருந்து அவரது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றதாகவும் பின்னர் வன்னிவேடு அருகே கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வாலாஜாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த விசாரணையில் அக்பரின் மனைவி ரியானா அவரது கள்ளக்காதலனும், பள்ளித்தோழனுமான காலித் அகமதுடன் சேர்ந்து 6 இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அவரது வீட்டிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு பின்னர் பிரேதத்தை நெடுஞ்சாலை ஓரமாக வீசிச்சென்றது அம்பலாமாகியுள்ளது.
அதுக்குறித்து போலிஸ் தரப்பில் கூறுவது என்னவெனில், ரியானாவின் பள்ளித்தோழனான காலித் அகமதுவுக்கும் ரியானாவிற்கும் இடையே இருந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது. ரியானாவுடன் தனியாக வசித்து வந்த அவரது கணவரான அக்பருக்கு இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தவுடன் நிறுத்துக்கொள்ளுமாறு கண்டித்துள்ளார்.
ஆனால் இதில் ஆத்திரமடைந்த ரியானா அவரது கள்ளக்காதலான காலித் அகமதுவிடம் அக்பர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், காப்பாற்றுமாறு கூறியதாக தெரிகிறது.
காதல் கண்ணை மறைக்க ஆத்திரமடைந்த காலீத் அவனது நண்பர்களான வாலாஜாப்பேட்டை சேர்ந்த சதீஷ் என்ற சலூன் தொழிலாளியுடன் சேர்ந்து அக்பரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர்.
இதற்கு 6 இலட்சம் பேரம் பேசிய சதீஷ் பாகவெளியை சேர்ந்த சேர்ந்த லோகநாதன், விவேக், கிருபாகரன், வாலாஜாப்பேட்டை சேர்ந்த சின்னகுட்டி, ராஜு ஆகியோரை கொலையாளிகளாக புக் செய்துள்ளான்.
கடந்த செப்டம்பர் 7 ம் தேதியன்று ரியானாவின் வீட்டிற்கு கூலிப்படையுடன் சென்ற காலீத் அகமது, படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த அக்பர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியுள்ளனர்.
அக்பர் துள்ளும்போது அவரது கால்களை மற்றவர்கள் பிடித்து அமுக்கியுள்ளனர். அவர்களுக்கு அக்பரின் மனைவி ரியானாவி உதவி செய்துள்ளார். அவர் இறந்தது உறுதியானவுடன் அவரது சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் சுற்றித்திரிந்துள்ளனர்.
மேலும் அவரது இருசக்கர வாகனத்தை சந்தைக்கு அருகில் விட்டு விட்டு சந்தேகம் ஏற்படாதவாறு பிரேதத்தை வன்னிவேடு அருகே நெடுஞ்சாலை ஓரமாக வீசிவிட்டு விபத்தில் இறந்தது போல செட்டப் செய்துவிட்டு கொலையாளிகள் காரில் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அக்பரின் உடலை கைப்பற்றிய வாலாஜாப்பேட்டை போலீசார் அவரது கழுத்தில் ஏற்பட்ட காயங்களை வைத்து இது கொலை என முடிவு செய்த பின் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சந்தேகத்தின் பேரில் அக்பரின் மனையின் போன் ரெக்கார்டுகளை ஆய்வு செய்த போது அதில் இருந்து காலீத் அகமதுவிடம் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியப்போது ரியானாவின் கள்ளக்காதலும் அதற்கு இடையூறாக இருந்த அக்பரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அக்பரின் மனைவி ரியானா மற்றும் விவேக், சதீஷ், லோகநாதன், கிருபாகரன் ஆகியோரை வாலாஜாப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியும் தலைமறைவாகியுள்ள காலித் அகமது, சின்னகுட்டி, ராஜு உட்பட மூன்று பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.