திருமணத்தை மீறிய உறவை கண்டித்த மனைவியை கொடூரமாக கொன்ற கணவனின் செயல் தென்காசி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் கண்ணன். இவரது மனைவி சுமதி. வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மேலும், இந்த காதல் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்ணனுக்கு சரியான வருமானம் கிடைக்காததால், இவர்கள் குடும்பம் வறுமையில் வாடியுள்ளனர். இதனிடையே, கண்ணனின் மூத்த மகள் தன்னுடைய கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திக்கொண்டார். இந்தச் சூழலில் கண்ணனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் சுமதி காதுக்கு வரவே, கணவன் மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.
அதே நேரம், கண்ணனுக்கு கிடைக்கும் வருமானத்தை வீட்டில் கொடுக்காமல், குடிப்பதையே தொழிலாக வைத்து வந்துள்ளார். ஆனால், சுமதியோ சிறு சிறு தொழில்கள் செய்து, அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் தன்னுடைய மகள்களை வளர்த்திருக்கிறார். இதனிடையே, கடந்த 13 ஆம் தேதியன்று மகள்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் கண்ணனுக்கும் சுமதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, “ரெண்டு பொம்பள புள்ளிங்கள பெத்து வெச்சிக்கிட்டு நீங்க செய்றது நியாயமா?” என கண்ணனிடம் சுமதி சண்டை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கண்ணன், தன் மனைவி என்று கூட பார்க்காமல் சுமதியை ஓட ஓட அடித்து விரட்டியுள்ளார். இதில் வலி தாங்க முடியாத சுமதி தன் வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலுக்குள் ஓடி ஒளிந்துள்ளார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற கண்ணன் கோயிலுக்குள் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வரவே, கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சுமதியின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதே நேரம், தப்பி ஓடிய கண்ணனை ஆலங்குளம் போலீசார் தீவிரமாகத் தேடிவந்தனர். இதையடுத்து, அத்தியூத்து கிராமப் பகுதியில் பதுங்கியிருந்த கண்ணனை மடக்கி பிடித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.