Skip to main content

குமிரியில் மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

Published on 12/01/2018 | Edited on 12/01/2018
குமிரியில் மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

கன்னியாகுமரி கோவளத்தில் சரக்கு மாற்று பெட்டக முனையம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து மீனவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



28 ஆயிரம் கோடி செலவில் சரக்கு மாற்று பெட்டக முனையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு செயல்பட்டு வந்தது.

சரக்கு மாற்று பெட்டக முனையம் அந்த பகுதியில் அமைத்தால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு  சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு மாசு ஏற்படுவதோடு ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் இழக்க நேரீடும் என குற்றம்சாட்டி மீனவா்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசும் அதிகாரிகளும் திணறினார்கள். இந்த நிலையில் இணையத்தில் அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக கூறி இரண்டு மாதங்களுக்கு முன் மத்திய அரசு அதை ரத்து செய்தது.

பின்னா் கன்னியாகுமரி அருகே கோவளத்தில் 19 ஆயிரம் கோடி செலவில் சரக்கு மாற்று பெட்டக முனையம் அமைக்க மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆய்வுக்கு சென்ற கலெக்டரையும் சிறைபிடித்தனர்.

இந்த நிலையில் சரக்கு மாற்று பெட்டக முனையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆயிரக்கணக்கான மீனவா்கள் கோவளத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இன்றிலிருந்து தினம் ஓவ்வொரு கிராமத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடக்கும் என்று மீனவா்கள் கூறியுள்ளனர்.
 
- மணிகண்டன்

சார்ந்த செய்திகள்