Skip to main content

'இவ்வளவும் குப்பைக்கு போனால் எங்கள் வாழ்வு எப்படி மணக்கும்' -வேதனையில் பூ விவசாயிகள்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

How will our life smell if so much goes to waste - Flower farmers in agony

 

'கிலோ 5 ரூபாய்க்கு விற்றாலும் தினமும் 5 டன் பூ குப்பைக்கு போனால் எப்படி விவசாயிகள் வாழ்க்கையில் நறுமணம் வீசும்?' இப்படி ஒரு கேள்வியைத் தான் பூ விவசாயிகள் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள் பூ சாகுபடி செய்த விவசாயிகள்.

 

மதுரை, திருச்சி பூ சந்தைக்கு அடுத்தது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பூ சந்தை. பூ விற்பனை அதிகம்.  அதாவது, கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வரை கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கனகாம்பரம் பூ மட்டுமே அதிகமாக விவசாயம் செய்த விவசாயிகள் தங்கள் தோட்டத்திலேயே உள்ளூர் வியாபாரிகளிடம் விற்றனர். அதன் பிறகு மல்லிகை, முல்லை, காட்டுமல்லி, ரோஜா, சம்பங்கி, செண்டி என அனைத்து வகை பூக்களையும் பயிரிட்டனர். தோட்டத்தில் பறிக்கும் பூக்களை கீரமங்கலத்தில் உள்ள பூ கமிசன் கடைகள் மூலம் விற்பனைக்கு வர புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் என பல மாவட்ட வியாபாரிகளும் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர். ஒரு நாளைக்கு சுமார் 10 டன் பூக்கள் விற்பனை நடந்து வருகிறது. ஆனால் பூக்களுக்கு நிரந்தரமான விலை இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு விலை தான். பண்டிகை, சுப முகூர்த்த நாட்களில் ஆயிரங்களில் விலை போகும் பூக்கள் மற்ற நாட்களில் கிலோ ரூ.5, 10 க்கும் 100, 200 க்கும் விற்பனை ஆகும்.

 

அதிலும் ஆடி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சொல்லவே வேண்டாம் விலை குறைவுதான். கடந்த சில மாதங்களாக சம்பங்கி பூக்கள் கிலோ ரூ,5, 10, 20 க்கு விற்பனை செய்யும்போது கூட ஒரு நாளைக்கு 5 டன் வரை பூக்கள் விற்பனை ஆகாமல் தேங்கி குப்பைக்கு போகிறது. இதனைப் பார்த்து வேதனைப்படாத விவசாயிகளே இல்லை.

 

இது குறித்து பூ விவசாயிகள் கூறும் போது, 'தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் அத்தனை வகை பூக்களும் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் பருவ காலத்தை தவிர மற்ற நாட்களில் விற்பனை மந்தமாக இருக்கும். அந்த நேரங்களில் உற்பத்தி செலவு, பூ பறிக்கும் கூலிக்கு கூட விற்பனை ஆகாது. சம்பங்கி பூ பறிக்க கிலோவுக்கு ரூ.20 கொடுக்கனும் உற்பத்தி செலவு தனி ஆனால் கமிசன் கடையில் விற்பனையாவது கிலோ ரூ.10. இதில் விவசாயிகளுக்கு பறிக்கும் கூலி கூட நட்டம். அதேபோல பூ தேவை குறைவாக இருப்பதால் 10 ரூபாய்க்கு வாங்கிய பூக்களை விற்கமுடியாமல் கமிசன் கடைகாரங்களுக்கும் நட்டம். இப்படியே தொடர்ந்து நட்டப்படுவதே வழக்கமாகிப் போச்சு. தினமும் 3 முதல் 5 டன் வரை பூக்கள் குப்பைக்குத் தான் போகிறது.

 

ஒரு நறுமண தொழிற்சாலை இருந்தால் குறைந்த விலை விற்றாலும் வீணாகி குப்பைக்கு போகாமல் தொழிற்சாலைக்காவது போகும். இப்படி டன் கணக்கில் பூக்கள் குப்பைக்கு போவதைப் பார்த்து விவசாயிகளின் வியர்வையும் உழைப்பும் இப்படி போகுதேன்னு கண்கலங்கிட்டு கடந்து போகத்தான் முடிகிறது' என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்