சேலத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், 1.03 லட்சம் ரூபாய் மதிப்பிலான கலப்பட மசாலா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலத்தை அடுத்த உடையாப்பட்டியில் பழனியப்பன் என்பவர், 'ஜானீஸ் ஏற்காடு மசாலா' என்ற பெயரில் சமையலுக்குத் தேவையான மசாலா பொருள்களை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கலப்பட மசாலாக்கள் தயாரிக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள் புஷ்பராஜ், முத்துசாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை (மே 27) காலையில், புகாருக்கு உள்ளான நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், மிளகுத்தூளை மிளகின் மேல் தோலை அரைத்து தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும், சிக்கன் 65 மசாலா பொடிகளில் செயற்கை நிறமிகளை கலந்து தயாரிக்கப்படுவதும் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, அந்த ஆலையில் இருந்து கலப்பட மிளகு தோல் 320 கிலோ, கலப்பட மசாலா 318 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 1.03 லட்சம் ரூபாய் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட மசாலா பொருள்களில் இருந்து மாதிரிகள் சேகரித்து, உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆம்லெட் முதல் நறுக்கிய பழங்கள் வரை எல்லாவற்றிலும் மிளகுத்தூளை தூவிவிட்டு சப்புக்கொட்டி சாப்பிடுவது உணவுப்பிரியர்களின் வழக்கமாகவே மாறி விட்டது. ஆனால், சாலையோர சிறு உணவகம் முதல் பெரிய உணவகங்கள் வரை பயன்படுத்தப்படும் மிளகுத்தூளில் பெரும்பாலும் இதுபோன்ற மிளகின் மேல் தோலை அரைத்துத் தயாரிக்கப்பட்ட மிளகுத்தூளாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கிறார்கள் துறை அலுவலர்கள்.
உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கையால் கலப்பட மசாலா பொடி தயாரிப்பு நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.