புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் உள்ள நார்த்தாமலை அம்மாச்சத்திரம் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் நேற்றைய பயிற்சியின் போது வெளியான துப்பாக்கி குண்டு சுமார் இரண்டரை கி.மீ க்கு அப்பால் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி (11) என்ற சிறுவன் தலையின் வலது மேல்பகுதியில் பாய்ந்தது.
சிறுவனின் மண்டை ஓட்டை உடைத்து மூளைக்குள் உடைந்த மண்டை ஓட்டு துண்டுடன் துப்பாக்கி குண்டும் சிக்கிக்கொண்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் சிறுவன் தலையில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டு மற்றும் மண்டை ஓட்டின் உடைந்த துண்டுகளை அகற்றினார்கள்.
ஆனாலும் சிறுவனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவம் குறித்து இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் விசாரணை நடக்கிறது. இன்று மாலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்ட கூட்டத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில்பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.