ஒவ்வொரு திருவிழாவிலும் முக்கிய நிகழ்ச்சி தேரோட்டம். காய், கனி, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அலங்காரத்தில் வீற்றிருக்க மேள தாளங்கள், வாணவேடிக்கை முழங்க, பக்தர்கள் முழக்கத்துடன் கரகோசங்களும் எழுப்பி வடம் பிடித்து இழுத்துச் செல்லும் போது ஆடி அசைந்து செல்லும் அழகோ அழகு... அந்த அழகை ரசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் தேரோட்ட வீதிகளில் காத்திருந்து தரிசனமும் செய்வது வழக்கம். இதைத் தான் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இத்தனை அழகிய தேர் புறப்பட்ட இடத்திலிருந்து வீதிகளை சுற்றி பல மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்ட இடத்திற்கே எப்படி வந்து சேர்கிறது?
குட்டிக் காரைக் கூட ஓட்டி வளைவுகளில் திருப்ப ஸ்டியரிங், வேகத்தை கட்டுப்படுத்த பிரேக், வேகத்தை கூட்டக் குறைக்க ஆக்சிலேட்டர் இப்படி எல்லாமே இருக்கும். ஆனால் இவ்வளவு பெரிய தேரால் யாருக்கும் எந்த சிறு பாதிப்பும் இன்றி பாதுகாப்பாகவும், அழகாகவும் ஓட்டி வந்து நிறுத்துவது எவ்வளவு சிரமம். அதற்குப் பின்னால் உள்ள சிரமங்களும் ரொம்பவே அதிகம்.
உயிரை பணயமாக வைத்து ஒவ்வொரு தேர் சக்கரத்திற்கும் கட்டைகளைக் கொடுத்து திருப்புவதும், நிறுத்துவதற்கும் எத்தனை சிரமங்கள். திருவாரூர் தேரில் கூட ஹைட்ராலிக் பிரேக் உண்டு என்றாலும், கூட அது அவசரத்திற்கு மட்டுமே... பல டன் மதிப்புள்ள தேரை முழுமையாகக் கொண்டு வந்து நிறுத்தும் பொறுப்பு தச்சர்கள் கையிலேயே உள்ளது.
இது குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோயில் தேரோட்டத்தில் தேர்க்காலுக்கு கட்டை கொடுத்த தச்சர்கள்..
'கரணம் தப்பினால் மரணம்' ஒரு தேரை செய்றது மட்டும் எங்கள் வேலை முடிந்து விடுவதில்லை. ஒவ்வொரு தேரோட்டத்திலும் நாங்கள் தான் வந்து தேர்ச் சக்கரங்களுக்கு ஆப்பு போன்ற கட்டைகளை செய்து தேரை கொண்டு வந்து நிறுத்தும் வரை கண்ணும் கருத்துமாக பார்க்கனும்.
ஒரு மாதம் விரதம் இருந்து தேர்ப்பணிகளை செய்து தேர் இழுக்கத் தொடங்கும் போது கிராமத்தில் செய்ற மாலை மரியாதை தான் எங்களுக்கு பெருமை. சம்பளத்தை எதிர்பார்க்க மாட்டோம். நன்றாக வழுக்கும் தன்மை கொண்ட கட்டைகளில் ஆப்புகள் செய்து தேர்ச் சக்கரங்களோடு செல்லுவோம். ஒரு கையில் 30 கிலோ எடையுள்ள கட்டையும் மற்றொரு கையில் உயிர் கயிறையும் பிடித்துக் கொண்டே போகனும். உடனுக்குடன் கட்டைகளை மாற்ற 20 பேர் முன்னால் கட்டைகளுடன் நடந்து கொண்டே இருப்பார்கள். தேர் முன்னால் செல்லும் போது நாங்கள் தேர்ச்சக்கரங்களை பார்த்துக் கொண்டே பின்னால் தான் போகனும்.
தேர் தடக்கோட்டை தாண்டி செல்கிற போது உடனே கட்டை கொடுத்து திருப்பனும் இப்படி எங்கள் உயிரை பணயம் வைத்து தேர் நிலைக்கு வந்து நிறுத்தும் போது தான் நிம்மதி ஏற்படும். கட்டை கொடுக்கிற எங்களுக்கு உயிர்பயமே இருக்க கூடாது என்கிறார்கள்.
இத்தனை ஆபத்தான முறையில் தான் ஒரு அழகிய தேர் வீதிகளை சுற்றி வருகிறது.