விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணன் தம்பி இருவருக்கும் சொந்தமான வீட்டுமனை மீதான தகராறில் அண்ணன் மீது தீ வைத்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் வசித்து வரும் இளங்கோவன் என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது உடன் பிறந்த தம்பி நந்தகோபாலுக்கும் சொந்தமான வீட்டுமனை விளந்தை கிராமத்தில் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இளங்கோவன் மட்டும் விளந்தை கிராமத்திற்குச் சென்று அந்த வீட்டுமனையில் கொட்டகை அமைத்து தங்கியிருந்துள்ளார். இதனையறிந்த நந்தகோபால் விளந்தை கிராமத்திற்குச் சென்று இளங்கோவனிடம் இருவருக்கும் பொதுவான இந்த வீட்டுமனை சொத்தில் எனக்கும் உரிமை இருக்கும் போது என்னைக் கேட்காமல் நீ மட்டும் இங்கு வந்து கொட்டகை அமைத்து தங்கியது ஏன் என்று கேட்டுள்ளார்.
இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நந்தகோபால் இளங்கோவனை நோக்கி ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, அருகில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து இளங்கோவன் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். இதனால் அலறிக் கூச்சலிட்ட இளங்கோவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் நந்தகோபாலை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு வீட்டுமனைக்காக அண்ணன் மீது தீயிட்டுக் கொளுத்திய தம்பியின் செயல் அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.