ஒசூரில் வீட்டை வாடகைக்கு எடுத்து, முக்கிய பிரமுகர் ஒருவரை தீர்த்துக்கட்ட நோட்டமிட்டு வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படை கும்பலை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரில் நான்கு மர்ம நபர்கள், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
ஓசூர் காவல்துறையினர் மர்ம நபர்களை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். இதில் அவர்கள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாண்டியன் (வயது 36), சங்கர் என்கிற சரவணகுமார் (வயது 34), சின்னதம்பி (வயது 24), கருப்புசாமி என்கிற கருப்பு பாண்டி (வயது 32) என்பது தெரிய வந்தது.
நெல்லையில் பல குற்ற வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதும், ஓசூரில் முக்கிய பிரமுகர் ஒருவரை தீர்த்துக் கட்டுவதற்காக அந்தப் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து, நோட்டமிட்டு வந்ததும் தெரிய வந்தது. இவர்கள் அரசியல் கொலைகளுக்கு கூலிப்படையாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
அவர்களை ஓசூருக்கு அழைத்து வந்தது யார்? யார் யாரை நோட்டமிட்டு வந்தனர்? என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.