
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த ஆறுசாமி, கரோனா தொற்று காரணமாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தார். உயிரிழந்த ஆறுசாமியின் சிகிச்சை விபரங்கள் மற்றும் மருத்துவ கட்டணத்திற்கான பில்களை அம்மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை என கூறப்படுகின்றது.
இது தொடர்பாக பேசுவதற்காக பொள்ளாச்சியிலிருந்து நோயாளியின் உறவினர்கள் 7 பேர் வந்து கேட்டபோது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த ஆறுசாமியின் உறவினர்கள், மருத்துவமனை மருத்துவரின் விலை உயர்ந்த செல்போனை தூக்கிக்கொண்டு சென்றனர்.
அவர்களை பிடிக்க சென்ற மருத்துவமனை ஊழியர்களுக்கும் உயிரிழந்த நோயாளியின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மருத்துவமனை அருகே சாலையில் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்ட நிலையில், செல்போனை தூக்கி எறிந்து விட்டு ஆறுசாமி உறவினர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர்.
இது தொடர்பாக அம்மருத்துவமனை பி.ஆர்.ஒ பாலசுப்பிரமணியம், போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நோயாளிகளின் உறவினர்கள் 7 பேர் மீது கொலை மிரட்டல், மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இருதரப்பினர் மோதிக்கொள்ளும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.