நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் எக்ஸ்-ரே டெக்னீசீயன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. உடலைக் கைப்பற்றிய நாகை நகரப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னை காசிமேட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் நாகப்பட்டினம் நாகநாதர் சன்னதி தெருவில் வாடகை வீடு ஒன்றில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், விக்னேஸ்வரன் இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அப்போது விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர்கள் நாகை நகரக் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விக்னேஸ்வரன் உயிரிழப்பிற்கு பணிச்சுமையா; கடன் தொல்லையா; குடும்பப் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனப் பல்வேறு யூகங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாகை மருத்துவமனைக்கு மாற்றலாகி வந்த விக்னேஸ்வரன் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.