இந்துத்துவா அமைப்புகள் கொண்டுவரத் துடிக்கும் யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்கக் கூடாது! - எஸ்.டி.பி.ஐ.
இந்துத்துவா அமைப்புகள் கொண்டுவரத் துடிக்கும் சர்ச்சைக்குரிய யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
யோகா வெறும் உடற்பயிற்சியாக மட்டும் அல்லாமல், அது ஒரு மதம் சார்ந்த மற்றும் சூர்ய நமஸ்காரம் உள்ளிட்ட பிற மத வழிபாட்டுக்கு எதிரான முறைகளை உள்ளடக்கியதாக உள்ளது. ஆகவே, யோகாசனம் உடல் நலனுக்கு பலனளிக்கக் கூடிய உடற்பயிற்சி என்ற அளவில் மட்டும் அதனை ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அதனை பள்ளிகளில் கட்டாயமாக்கக் கூடாது. மதசார்பற்ற கொள்கைகளை கடைபிடித்து வரும் தமிழக அரசு, கல்வி நிலையங்களில் யோகாவை கட்டாயப்படுத்துவதால் அது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கும்.
பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பெருக்குவதற்கு பல்வேறு வகையிலான விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகள் உள்ள நிலையில், இந்துத்துவா அமைப்புகள் கொண்டுவரத் துடிக்கும் சர்ச்சைக்குரிய யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்குவதை அனுமதிக்க முடியாது. ஆகவே, தமிழக அரசு யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்காமல், பிறரின் மதநம்பிக்கைகளை சீர்குலைக்காமல் அதனை ஒரு உடற்பயிற்சி என்ற அளவிலே மட்டும் செயல்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.