விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வைகுண்டவாசப் பெருமாள் கோவில், சிவலோகநாதர் செல்வாம்பிகை கோவில், திருமுண்டீச்சரம் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களின் முன்பு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ் அப்பு தலைமையில் சூடம் ஏற்றி சாமிகும்பிடும் போராட்டம் பூட்டப்பட்ட கோவில்கள் முன்பு நடத்தினார்கள். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். தமிழக அரசு கரோனா பரவல் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக பல்வேறு தடை உத்தரவை பிறப்பித்தது. அதன்படி மக்கள் கடைபிடித்து வந்தனர். கடந்த இரண்டு வாரங்களாக தடையுத்தரவுகள் தளர்த்தப்பட்டு பொதுமக்கள் சுமுக வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கரோனா பரவல் குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மூடப்பட்டிருந்த வணிக நிறுவனங்கள் கடைகள் ஆகியவற்றை திறக்க அரசு உத்தரவிட்டது. மேலும் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டது. தற்போது டாஸ்மாக் சரக்கு வாங்க மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காற்றில் பறக்க விட்டுவிட்டு சரக்கு வாங்கி செல்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 50% பயணிகளுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் புறநகர் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பொதுமக்கள் தங்கள் கவலைகளைப் போக்க, தங்கள் பிரச்சனைகளை, குடும்பச் சிக்கல்களை ஆலயங்களுக்கு சென்று இறைவனிடம் முறையிட்டு தரிசனம் செய்து வருவார்கள். அவர்களுக்கு இறைவன் குடியிருக்கும் ஆலயங்களே புகலிடமாக உள்ளன. அப்படிப்பட்ட ஆலயங்கள் மூடப்பட்டு கிடக்கிறது.
பக்தர்கள் மனதில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் கோவில்களைத் திறந்து பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இறைவனை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கோயில்களின் சூடம் ஏற்றி வழிபடும் போராட்டம் நடத்தினார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக கூடும் வணிக நிறுவனங்களை டாஸ்மாக் கடைகளை திறக்கும் போது ஏன் கோயில்களை மட்டும் பூட்டு போட்டு அடைத்து வைக்க வேண்டும். உயிரை குடிக்கும் டாஸ்மாக் கடையை திறந்து வைக்கலாம் எங்கள் உயிரைக் காக்கும் இறைவன் ஆலயத்தை மூடி வைக்க வேண்டுமா? உடனடியாக கோவில்களை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறக்க வேண்டும் என்று இந்து முன்னணியினரும் பொதுமக்களும் இப்போராட்டத்தின் மூலம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இந்த வழிபடும் போராட்டத்தில் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், அழகேசன், விக்னேஷ் மற்றும் கண்ணன், தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.