மூடப்பட்ட கோயில்களை மக்கள் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்க வேண்டும் என ஆலயம் முன்பு கற்பூரம் ஏற்றி, இசை வாத்தியம் முழங்கியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்து முன்னனி கட்சியினர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு தொடர்கிறது. பல்வேறு கட்டுப்பாடுகளால் கடந்த 3 மூன்று மாதங்களாக ஆலயங்களில் சிவாச்சாரியார்களைக் கொண்டு பூஜைகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன, பக்தர்களை அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர எஞ்சிய மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு, கோயில்கள் கூட்டம் அதிகமிருக்கும் என்பதால் அதனைத் திறப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
இந்தநிலையில், மதுபானக் கடைகளைத் திறக்க மட்டும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் கோயில்களைத் திறக்க மறுக்கிறது. ஆலயங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி நாகை சட்டையப்பர் கோவில் முன்பு இந்து முன்னணி கட்சியினர் சாலையில் சூடம் கொளுத்தி, இசைக் கருவிகளை முழங்கியபடியே மக்கள் வழிபாட்டிற்காக கோயில்களைத் திறக்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.