தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் மொட்டை அடிக்கும்போது கட்டணம் வசூல் செய்யப்படமாட்டாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்திருந்தார்.
அதன்படி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கட்டணம் இல்லாமல் மொட்டை அடிக்க தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்திலுள்ள முடி காணிக்கை செலுத்தும் நிலையங்களில் கட்டணம் இல்லாமல் முடி காணிக்கை செலுத்திவிட்டு மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர்.
கடந்த காலங்களில் பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்த பக்தர்களிடம் இருந்து முப்பது ரூபாய் கட்டணமாக பெறப்பட்டுவந்தது. தற்போது கட்டணம் இல்லாமல் முடி காணிக்கை செலுத்துவதால், முடி காணிக்கைக்கான செலவு இல்லாமல் போனதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல நல்ல திட்டங்களைக் கோயில்களில் செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டத்தை வரவேற்றுள்ள இந்து அமைப்பினர் சிலர், “பல ஆண்டுகளாக கோயில்களில் கட்டணம் இல்லாமல் முடிக்காணிக்கை செலுத்தும் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பக்தர்கள் நலன் கருதி கட்டணமில்லா முடிக் காணிக்கை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், பழனியை திருப்பதி போல மாற்றுவேன் என அறிவிப்பு செய்திருந்தார். தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அதற்கான முதல் முயற்சியாக கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டத்தை துவங்கியுள்ளதாக தெரிகிறது” என்றனர். தமிழ்நாடு அரசு கட்டணம் இல்லா முடிக் காணிக்கை திட்டத்தைக் கொண்டுவந்ததைக் கண்டு பக்தர்களும் பாராட்டிவருகிறார்கள்.