தமிழகத்தில் உள்ள 47 திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து ரூ.10 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு, இந்து அறநிலையத்துறை துறையின் செயல் அலுவலர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோருக்கு, இந்து அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் ஏப்ரல் 24-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளளார். அதில், பழனி முருகன் கோயில், திருச்செந்துார் முருகன் கோயில், மதுரை, திருத்தணி, திருவேற்காடு, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், ராமேஸ்வரம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஆகிய திருக்கோயில்களில் இருந்து தலா ரூ.35 லட்சம், பண்ணாரி அம்மன் கோயில், அழகர்கோயில், மருதமலை கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில், மாங்காடு கோயில், திருப்பரங்குன்றம், சங்கரன்கோயில், சுவாமி மலை கோயில், மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் ஆகிய திருக்கோயில்களில் இருந்து தலா ரூ,25 லட்சம் மற்றும் காஞ்சிபுரம் தேவராஜர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜர் கோயில், சோளிங்கர் லக்ஷ்மிநரசிம்மர் கோயில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களில் இருந்து தலா ரூ.15 லட்சத்தை, முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக திருக்கோயில்களில் இந்து அறநிலையத்துறை ஊழியர்களை தவிர, அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள், பூக்கள் வழங்குவோர், இசைக்கலைஞர்கள், சுத்திகரிப்பாளர்கள் உட்பட பத்துக்கு மேற்பட்ட வகைப்பிரிவிலான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதாந்திர சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை என்பதோடு, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது குறைந்தபட்ச ஊதிய சட்டம்–1948-ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. திருக்கோயில்கள் நிர்வாகத்துக்குள் உள்ள இந்த முக்கிய பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படுத்தப்படாத நிலையில், திருக்கோயிலின் உபரி நிதியை முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்குவது என்பது, திருக்கோயிலின் ஒரு அங்கமான பணியாளர்களின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையை அப்பட்டமாக மீறுவதாகும்.
வாழ்வாதாரத்துக்கு திருக்கோயில்களை சார்ந்திருப்போருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு வெளியிட்ட அறிவிப்பும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம் –1959-ன் 36-வது பிரிவில், ‘இந்தச் சட்டத்தின் 66(1) பிரிவு குறிப்பிடும் நோக்கங்களுக்கு மட்டுமே திருக்கோயிலின் உபரி நிதியைப் பயன்படுத்தலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் 66(1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள்:
*ஏழ்மையான அல்லது உதவி தேவைப்படுகின்ற சூழ்நிலையில் உள்ள சமய நிறுவனத்துக்கு உதவி அளித்தல்.
* இந்து சமயத்துடன் தொடர்புடைய சமய நோக்கத்துக்கு உதவி அளித்தல்.
* நிறுவனத்தின் சமயக் கோட்பாடுகளைப் பரப்புதல்.
*திவ்யப்பிரபந்தத்தையும், தேவாரத்தையும், இவை போன்றவற்றையும் ஓதுதல்.
*அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள் ஆகியோருக்கு பயிற்சியளித்தல், அந்த நோக்கத்திற்காக இந்திய மொழிகளைப் படிக்கவும், திவ்யப்பிரபந்தம், தேவாரம் உள்ளிட்டவற்றைப் படிப்பதற்காக பள்ளிகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.
*இந்து சமயம், தத்துவம் அல்லது சாத்திரங்களைக் கற்பதற்காக அல்லது இந்துக்கோயில் கட்டடக்கலையில் கல்வியளிப்பதற்கு வகை செய்யும் பல்கலைக்கழகம் அல்லது கல்லுாரி அல்லது வேறு நிறுவனத்தை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.
*இந்து சமயக் கல்விக்கு வகை செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.
*கவின் கலைகளையும் கட்டடக் கலைகளையும் வளர்த்தல்.
*இந்து குழந்தைகளுக்காக அனாதை விடுதிகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.
*தொழுநோயால் துன்புறுவோருக்கு காப்பகங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.
*திக்கற்றவர்களுக்கான, உதவியற்றவர்களுக்கான மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான ஏழையர் இல்லங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.
*புனிதப்பயணிகளின் நலனுக்காக மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.
மேலும், எந்த ஒரு நோக்கத்துக்கும் திருக்கோயில் உபரி நிதியை பயன்படுத்த சட்டத்தின் 36-வது பிரிவின்கீழ் அனுமதி வழங்கும்முன், அது குறித்த விவரங்களை ஆணையர் வெளியிட்டு, எதிர்ப்பு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்று, அவை அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே, 47 திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து ரூ.10 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு, இந்து அறநிலையத்துறையின் செயல் அலுவலர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோருக்கு, இந்து அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் ஏப்ரல் 24-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கை சட்டவிரோதமானதாகும். இந்தச் சுற்றறிக்கை, இந்து சமயம் மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம் –1959-ன் 36 மற்றும் 66-வது பிரிவுகளுக்கு முரண்பாடாக அமைந்திருக்கிறது.
இந்தத் திருக்கோயில்களில் செலுத்தப்பட்டுள்ள நிதியானது, நம்பிக்கை அடிப்படையிலும், திருக்கோயிலின் நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படட்டும் என்ற நோக்கிலும் பக்தர்கள் வழங்கிய காணிக்கையில் இருந்து திரட்டப்பட்டதாகும். வேறு நோக்கத்துக்காக இந்த நிதியை பயன்படுத்துவது, பக்தர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக அமையும்.
மேற்குறித்தவை தவிர, கோவிட்–19 பேரிடர் காரணமாக நாடு முழுவதும் அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கால், திருக்கோயில்களில் தினசரி வழங்கப்படும் ஊதியத்தை சார்ந்து வாழ்க்கை நடத்தும் அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்களுக்கு, கடந்த 30 நாட்களுக்கு மேலாக, ஒரு நாளைக்கு கூட ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு, மேற்குறித்த 47 திருக்கோயில்களில் உள்ள உபரி நிதி, ஊரடங்கால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சனைகளை சமாளிக்க உதவும். இந்த 47 திருக்கோயில்களின் உபரிநிதியை பயன்படுத்தி, கோயில்களில் பணியாற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள் ஆகியோருக்கு உரிய வாழ்வாதாரப் பாதுகாப்பை வழங்குவதற்குத்தான், இந்து அறநிலையத்துறை இந்தச் சூழலில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேற்குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டிருப்பதின் மூலம், இந்து அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர், தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டிருக்கிறார். முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு திருக்கோயில்களுக்கு உத்தரவிட்டிருப்பதின் மூலம், சட்டத்தின் நோக்கத்தை மீறி செயல்பட்டிருக்கிறார் என்பது கவனத்திற்குரியது.
தவறாகப் பயன்படுத்தப்படுவதில் இருந்து திருக்கோயில்களின் நிதியை பாதுகாக்க வேண்டியது அவசர அவசியம். ஏனெனில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திருக்கோயில்களின் உபரிநிதி மாற்றப்பட்டால், அது அந்த நிதியின் நோக்கங்களுக்குப் பயன்படாமல் போய்விடும்.
மேற்குறித்த சுற்றறிக்கையானது, கோவிட்–19 காரணமாக அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சூழலை பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ள அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.
எனவே, இந்தச் சூழலில், நான் கீழ்க்காணப்படும் கோரிக்கைகளை முன்வைக்கிறேன்:
*இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையை, இந்து அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் ரத்து செய்ய வேண்டும்.
*மேற்குறித்த சுற்றறிக்கை அடிப்படையில் 47 திருக்கோயில்களி்ல் இருந்து பெறப்பட்ட ரூ.10 கோடி மொத்த தொகை அல்லது, திருக்கோயில்களில் இருந்து பெறப்பட்ட தொகையை, தலைமைச் செயலர், முதல்வரின் பொது நிவாரண நிதி துணைச்செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோர் திருப்பிச் செலுத்த வேண்டும்.
*கடந்த 30 நாட்களுக்கு மேலாக எந்த ஒரு வருமானமும் இல்லாமல் பரிதவிக்கும் இந்த 47 திருக்கோயில்களின் அர்ச்சகர்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள், ஓதுவார்கள், பூக்கள் வழங்குவோர், இசைக்கலைஞர்கள், சுத்திகரிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு, சம்பந்தப்பட்ட திருக்கோயிலின் உபரி நிதியில் இருந்து நிதியுதவி வழங்க இந்து அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் கவுசிக் ஆஜராகி வாதாடினார். இந்து அறநிலையத்துறை தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி, அரசாணையை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. எனவே அரசாணை அமல்படுத்தப்படாது, திரும்ப பெறுவது குறித்து புதிய ஆணை வெளியிடப்படும் என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள். அரசாணையை திரும்ப பெற்றுவிட்டு, அதன் விவரங்களை வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.