என்.எல்.சி சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய அரசின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பாக நெய்வேலி என்.எல்.சி உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவ்வாறு பணி நிரந்தரம் செய்யும் வரை அனைத்து சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும், வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சிறப்புச் செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச் செயலாளர் செல்வமணி, பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சிறப்புச் செயலாளர் சேகர் கூறுகையில், "என்.எல்.சியில் எங்களுக்கான கோரிக்கைகள் தொடர்பாக சொல்ல வந்தால் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு தமிழ் தெரியவில்லை. இந்திதான் தெரியும் என்கிறார்கள். எங்களுக்கு இந்தி தெரியாது. தொழிலாளர்கள் கூறும் கோரிக்கைகளை கேட்டுப் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் மாநில அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம்" என்றார்.