மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்தவேண்டிய நிலுவை வரி விவரங்களை, தாக்கல் செய்யக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீட்டை, அவரது நினைவில்லமாக மாற்ற கடந்த 2017ஆம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. இதற்கு அவரது அண்ணன் வாரிசுகளான தீபாவும் தீபக்கும் ஆட்சேபனை தெரிவித்து, தாங்களே அவரது வாரிசுகள் என வழக்கு தொடர்ந்தனர்.
அதேபோல, நினைவில்லமாக மாற்ற ஆட்சேபனை தெரிவித்த போயஸ் தோட்டம் - கஸ்தூரி எஸ்டேட் குடியிருப்பினர் சார்பாக, ஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரி தொடர்ந்த வழக்குகளையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை தீபா, தீபக் ஆகியோர் தரப்புக்கு வழங்கியதோடு, அவர்களை முதல்நிலை சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் என அறிவித்தது.
வழக்கு விசாரணையின் போது, வருமானவரித்துறை தரப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து, தங்களுக்கு 36.9 கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், நினைவில்லமாக மாற்ற ஏதுவாக, தீபா, தீபக் ஆகியோருக்கு சேரவேண்டிய இழப்பீட்டை வழங்கும் வகையிலும், வருமான வரித்துறைக்குச் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தும் வகையிலும், தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் 67.9 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.
அதன்படி, வேதா நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு 29.3 கோடி ரூபாய், கட்டிடத்திற்கு 2.7 கோடி ரூபாய் என 32 கோடி ரூபாயை தீபா, தீபக் தரப்புக்கு தரவும், 36.9 கோடி ரூபாய் வரி பாக்கியை வருமான வரித்துறைக்கு தரவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ள வருமான வரி பாக்கி, சொத்து வரி பாக்கி உள்ளிட்டவை தொடர்பான அனைத்து விவரங்களையும் தங்கள் தரப்புக்கு வழங்கக் கோரி, தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், ‘‘கடந்தாண்டு ஜூலை மாதமே, இதே கோரிக்கையுடன் வருமான வரித்துறையிடம் மனு அளித்தோம். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாகவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ், "வருமான வரி, சொத்து வரி போன்ற விவரங்கள் வேண்டுமானால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை அணுக வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக எல்லா விவரங்களையும் எங்களுக்கு கொடுங்கள் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த வழக்கில் வருமான வரித் துறை உள்ளிட்ட அனைவரையும் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, குறைந்தபட்சம் மனுதாரர் யாரை அணுகவேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.