தூத்துக்குடி நகரில் முக்கிய போதை சரக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாருக்கு தகவல் போயிருக்கிறது. அலர்ட்டான எஸ்.பி., நகரின் மத்திய பாக இன்ஸ்பெக்டரான ஜெயப்பிரகாஷ் தலைமையில் தனிப்படையை அமைத்திருக்கிறார். இந்தத் தனிப்படை டூவிபுரம் பகுதியில் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். அது சமயம் சந்தேகப்படும்படியான வகையில் நின்றிருந்த அண்ணா நகரின் அன்சார்அலி, மாரிமுத்து, இம்ரான்கான் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தவர்கள், அவர்களின் பையைச் சோதனையிட்டதில் உயரிய வெளிநாட்டுப் போதைப் பொருளான ஹெராயின் இருப்பது தெரியவந்திருக்கிறது.
தொடர்ந்து அவர்கள் இம்ரான்கான் வீட்டைச் சோதனை போட்டதில் 3 பாக்கெட்களில் இருந்த 162 கிராம் ஹெராயினைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி முத்து (42) என்பவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தியிருக்கிறார்கள். அங்கு 19 பாக்கெட்களில் பேக் செய்யப்பட்ட 21 கிலோ ஹெராயின் எனப்படும் வெளிநாட்டின் ஹைகுவாலிட்டி ஹெராயின் சிக்கியிருக்கிறது. அவரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில், தன்னுடைய தங்கு படகில் மீன் பிடிக்கப்போவது வழக்கம். கடந்த ஓராண்டிற்கு முன்பு லட்சத்தீவு கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கடலில் பெரிய பார்சல் ஒன்று மிதந்துவந்தது.
அதில் சுமார் 27 பாக்கெட்களில் 32 கிலோ வரையிலான இந்த ஹெராயின் இருந்தது. அதனைக் கைப்பற்றி தன்னுடைய நெருக்கமான உறவினரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்து சில்லறையாக விற்பனை செய்துவந்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மார்க்கெட் நிலவரப்படி 25 கோடி மதிப்பிலான ஹெராயினைக் கைப்பற்றிய தனிப்படையினர், அந்தோணிமுத்து மற்றும் அவருக்கு உதவிய பிரேம்சிங், கசாலி, விற்பனை செய்த அன்சார்அலி, மாரிமுத்து இம்ரான்கான் உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து தனிப்படை மற்றும் மத்திய பாகம் போலீசார் மேற்கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி வரலாற்றில் 25 கோடி வரையிலான ஹெராயின் போதைக் கேட்ச் அப் மிகப்பெரியது என்கிறார்கள் காவல் வட்டாரத்தினர். இந்த ஆப்பரேஷனை நடத்திய தனிப்படையினரைப் பாராட்டிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், “இது பெரிய அளவிலான மதிப்பு கொண்ட போதைச் சரக்கு. மாவட்டத்தில் போதை வழக்கில் சம்பந்தப்பட்ட 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. போதை விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுவார்கள். தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய புரோக்கர் முருகன் என்பவரை தேடிவருகிறோம்” என்றார் எஸ்.பி. 25 கோடி மதிப்பிலான மிகப்பெரிய போதை பறிமுதல் மாவட்டத்தில் பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.