Skip to main content

கிராம உதவியாளர்கள் நியமனத்தில் குளறுபடி - வட்டாட்சியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

High Court orders police to register case against staffs

 

கடந்த 2019 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி சங்கராபுரம் தாலுக்காவில் காலியாக இருந்த கிராம உதவியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்ட இரண்டு வட்டாட்சியர்களும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். அந்த அறிவிப்பில்  சம்பந்தப்பட்ட கிராமத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிப்பவர்கள் மற்றும் அதற்கான கல்வித் தகுதி உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் அவர்களுக்கு நேர்காணல் நடத்தி தகுதி உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்திருந்தனர். அதன்படி நிறைய பேர் வேலை கேட்டு விண்ணப்பித்தனர் (இதில் பணி நியமன பொறுப்பு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு மட்டுமே உண்டு).

 

இதனடிப்படையில்  விண்ணப்பித்தவர்கள் அனைவரிடமும்  நேர்காணலும் நடத்தப்பட்டது. ஆனால் அரசு விதிமுறைப்படி  தகுதியுள்ளவர்களுக்கு  பணி நியமனம்  செய்யாமல் அப்போதிருந்த வட்டாட்சியர்கள் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக விஐபிக்களின் நெருக்கடிக்களுக்கும் பணத்திற்காகவும் தகுதி இல்லாதவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதனை கண்டித்து அப்போதே சங்கராபுரம் பகுதியில் இருந்த அப்போதைய ஆளும் கட்சியை சேர்ந்த அதிமுகவினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் தகுதியுள்ளவர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும் தகுதி இல்லாதவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டதை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.

 

உயர்அதிகாரிகளுக்கு புகாரும் அனுப்பப்பட்டது. இது சம்பந்தமான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது கள்ளக்குறிச்சி வட்டாட்சியராக உள்ள பிரபாகரன் என்பவர் கிராம உதவியாளர்கள் பணிநியமனம் செய்தார்  (அப்போது கள்ளக்குறிச்சி சார் ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் பணி நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளார்) இதுசம்பந்தமான ஆவணங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து காணாமல் போய் விட்டது எனக்கூறி இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

 

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உரிய விசாரணை செய்து,  ஆவணங்கள் காணாமல் போனதற்கு காரணமான அப்போதைய வட்டாட்சியர் தயாளன், உதவியாளர் பாண்டியன், முதுநிலை ஆய்வாளர் தசரத ராஜன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஆவணங்கள் காணாமல் போனதற்குக் காரணமானவர்கள் என தற்போது கல்வராயன் மலை முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருக்கும் தசரதராஜன், விழுப்புரம் தாலுக்கா ஆதிதிராவிடர் நல தாசில்தாராக இருக்கும் தயாளன், உளுந்தூர்பேட்டை  தேர்தல்  பிரிவு வட்டாட்சியராக உள்ள பாண்டியன் எனவும், காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி வட்டாட்சியராக இருந்த தயாளன், முதுநிலை ஆய்வாளர் தசரத ராஜன் மீதும் தற்போது வழக்கு பாய்ந்த்துள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராகி வருவதாக கூறுகிறார்கள்.  வருவாய்த் துறையில் பணி செய்யும்  ஊழியர்கள், ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆவணம் களவாடப்பட்டுள்ள சம்பவம் அதற்கு காரணமானவர்கள் என காவல்துறையினரால் அடையாளம் காட்டப்பட்டுள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், முதுநிலை ஆய்வாளர் ஆகியோரது செயல்கள் பற்றி செய்திகள் வெளியானது கண்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஆவணங்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இப்படி ஆவணங்கள் களவாடப்பட்டதற்கு முக்கிய காரணம் கிராம உதவியாளர்கள் பணி நியமனங்கள் முறைகேடான முறையில் நடைபெற்றததான். இது சம்பந்தமான ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடும். அதற்கு பயந்து கொண்டே ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளது என்கிறார்கள் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் தாலுக்கா பகுதிகளில் வாழும் பொதுமக்கள். அப்போதைய அதிமுக ஆட்சியில் இதுவெல்லாம் சர்வசாதாரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்