Skip to main content

"ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது" - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..! 

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

High Court instructs Tamil Nadu government not to allow occupation of even an inch of forest land ..!

 

தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், மரங்கள் வெட்டப்பட்டு, இயற்கை எழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பறவைகள் மாயமாகி வருவதாகவும், நீரோடைகள் தடுக்கப்படுவதால் நிலச்சரிவுகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர், தமிழ்நாடு மலைப்பகுதியில் கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி, ரிசார்ட் கட்டி வருவதாகவும், அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை குவித்துள்ளதாகவும், வனப்பாதையை விரிவுபடுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுசம்பந்தமாக மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வனப்பகுதியை கட்டுமான பொருட்கள் வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும், வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வனப்பகுதியை ஆக்கிரமித்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடுவட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் எனவும், இதுசம்பந்தமான வனத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வனப்பகுதியில் இருந்து தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்