Skip to main content

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

High Court dismisses two bail pleas of Sivashankar Baba

 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமின் மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை, சி.பி.சி.ஐ.டி போலீசார் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் அவரை கைது  செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

ஏற்கனவே அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன.  இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார் அளித்த பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  கடந்த 2015, 2018, 2020 ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் கொடுத்த புகார்களில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போக்சோ சட்டம், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3 முறை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

 

மேலும், புகார் அளித்த மாணவிகளில் ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்துச் சென்ற பிறகும் 20 நடன நிகழ்ச்சிகளை தன்னுடைய பள்ளியில் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறும்  மாணவி ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபாவை குறித்தும் அவருடைய பள்ளியை குறித்தும் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கைதுக்கு பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதாக அவர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.  அதேபோல, வெறும் புகாரின் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனவும் அவர் வாதிட்டார்.

 

10 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலேயே வெவ்வேறு மாதங்களில் 3 முறை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த மனுக்களில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவின் இரு ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

சிவசங்கர் பாபா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி உத்தரவு விவரம்..

 

நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட  பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் உள்ளிட்ட அனைத்து தரப்பு ஆவணங்களையும் ஆய்வு செய்ததில், சிவசங்கர் பாபாவிற்கு ஜாமின் வழங்கினால் விசாரணைக்கோ, பாதிக்கப்பட்டவகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.


மக்களின் மனதிற்குள் இருக்கும் பிரச்சைகளுக்கு தீர்வளிப்பதாகவும், ரட்சிப்பதாகவும் கூறும் போலி சாமியார்களும், மத குருமார்களும் சமுதாயத்தில் காளான்களை போல் பெருகியுள்ளனர். விரக்தியில் இருக்கும் மக்களின் மன பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் கூறும் போலி சாமியார்கள் மற்றும் குருக்களின் கைகளிலேயே மக்கள் சிக்கிக்கொள்கின்றனர். இந்த சாமியார்கள் மீது  பொதுமக்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மையை பயன்படுத்தி உச்சகட்ட அளவில் அவர்களை சுரண்டுகின்றனர். பக்தி என்ற முகமூடியை பயன்படுத்தி மக்களின் நம்பிக்கைக்கு சாமியார்கள் துரோகம் செய்கின்றனர்.

 

அனைத்து தரபட்ட வயதினரும் சாமியார்கள் மீதான குருட்டு நம்பிக்கையால் பாதிக்கப்படுகின்றனர். தங்களின் உணர்வுகளுக்கு துரோகம் செய்யும் போலி சாமியார்களிடம் இருந்து மக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவர்களை நம்பும் பக்தர்களுக்கு பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கிறதோ இல்லையோ, துரோகம் செய்யும் சாமியார்கள் மக்களை பயன்படுத்தி அதிக அளவிளான சொத்துகளையும், அதிகாரத்தையும், செல்வாக்கையும் சம்பாதித்து விடுவார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.