சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக வீரபாரதி என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை டி.ஜி.பி. தலைமையிலான மாநிலக் குழுவிடம் மனு அளித்திருந்தேன். இதே போன்ற குற்றத்திற்காகத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மாநில அளவிலான குழு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் விடுதலை செய்யக் கோரியிருந்தேன். இது தொடர்பாகத் தமிழக முதல்வருக்குக் கோப்புகள் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியது. அதோடு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்துவிட்டார்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (17.10.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர். எனவே ஆளுநர் அதனை மீற முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும், “இந்த விவகாரத்தில் ஆளுநருக்குத் தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை. முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என மறுக்க முடியாது. எனவே அவ்வாறு மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறோம். அதோடு மனுதாரர் விரபாரதிக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அதுவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.