கல்வி கடன் வழங்க மறுத்த இந்தியன் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் மாணவர் நவீன். 12ஆம் வகுப்பு தேர்வில் 1017 மதிப்பெண் பெற்ற நவீனுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பதை லட்சியம். இதனால், சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஏழை குடும்பத்தை சேர்தவரான மாணவர் நவீன் கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாததால் வங்கியில் கல்வி கடன் பெறலாம் என திட்டமிட்டுள்ளார். அதன்படி ஆரணி பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்துள்ளார்.
கல்வி கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நவீன் தனது படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். ஆனால் நவீன் படிக்கும் மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு படிப்பு முடித்த பிறகு வேலை கிடைப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யாத காரணத்தை கொண்டு இந்தியன் வங்கி நவீனின் விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதையடுத்து, இந்தியன் வங்கியை எதிர்த்து மாணவர் நவீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, இது போன்ற காரணங்களுக்காக மாணவர்களின் கல்வி கடனை நிராகரிக்க கூடாது என நீதிமன்றங்கள் பல முறை உத்தரவிட்டும் இந்தியன் வங்கியின் இந்த செயல் கண்டனத்திற்கு உரியது என நீதிபதி தெரிவித்தார்.
அரசியல்வாதிகளின் சிபாரிசில் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெறுபவர்கள் பின்னர் கடனை செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடுவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்தியன் வங்கியன் இந்த செயலுக்கு 1 லட்சம் வரை அபராதம் விதித்திருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி வைத்தியநாதன், இனி வரும் காலங்களில் இது போன்று செயல்பட மாட்டோம் என வங்கி தெரிவித்ததையடுத்து அபராதம் விதிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், மாணவர் நவீனுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.