Skip to main content

தமிழக அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம்!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021
High Court accepts Tamil Nadu government's guarantee

 

தற்போதைய  கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைக்கப் போவதில்லை என்ற தமிழக அரசின் உத்தரவாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி,  கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,கூட்டுறவு சங்கங்களைக் கலைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம், பட்லூர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இளங்கோ, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் லோக முருகன், தர்மபுரி மாவட்டம், நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் திருமதி.வாசுகி சிற்றரசு உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள்  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்துள்ளதாகவும், கூட்டுறவு சங்கத்தை நிர்வகிக்க சட்டங்களும், நடைமுறைகளும் உள்ள போது, திடீரென தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பைக் கலைக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023 ம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும், ஏற்கனவே தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டுமென கோரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளின் விசாரணை  நீதிபதி D.கிருஷ்ணகுமார் முன்பு நடைபெற்று வந்தது

 

கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், எஸ்.ஆர் ராஜகோபால், பாஸ்கர், எல்.பி சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுமாறு சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப் படுவதாகும், அத்தகைய கூட்டுறவு சங்கங்கள் மீது வேண்டுமென்றே தவறான நோக்கில் தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே போல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களை  திடீரென்று கலைக்கக் கூடாது இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது,  கூட்டுறவு சங்கத்தைக் கலைக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டனர். தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தற்போதைய கூட்டுறவு சங்க நிர்வாகத்தைக் கலைக்கப் போவதில்லை என்றும், முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால், அத்தகைய சங்கங்கள் மீது மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு  முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தற்போதைய கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தைக் கலைக்கப் போவதில்லை என்ற அரசின் உத்தரவாதத்தைப் பதிவு செய்து கொண்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். அதே சமயம், நடவடிக்கைக்கு உள்ளாகும்  கூட்டுறவு சங்கங்கள் சட்டப்பூர்வ நிவாரணம் தேடிக்கொள்ள அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்