கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் பிரபல துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் நேற்று நடுத்தர வயது பெண்மணி ஒருவர் தனக்கான உடைகள் வாங்குவதற்குச் சென்றுள்ளார். உடைகளை வாங்கிய அந்த பெண் சரியா இருக்கிறதா என்று போட்டுப் பார்ப்பதற்காக அந்த கடையிலுள்ள துணி மாற்றும் அறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அந்த அறையின் மேல் பகுதியில் கண்ணாடி போன்று ஒன்று இருந்ததைப் பார்த்து சந்தேகம் அடைந்தார். உடனே தனது கையால் அதை தட்டிப் பார்க்கும் போது அதில் இருந்து ஒரு செல்போன் கீழே விழுந்தது. உடனடியாக அறைக்கு அருகே நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் அந்த செல்போனை பதற்றத்துடன் எடுத்துக்கொண்டார். இதனை கவனித்த உடை மாற்ற வந்த பெண் அதிர்ச்சியடைந்து நடந்த சம்பவத்தை வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் கடைக்குள் சென்று விசாரணை செய்தனர். அப்போது கடைக்காரர், ‘கீழே விழுந்த செல்போனை எடுத்த பெண் எங்கள் கடையில் வேலை செய்பவர் அல்ல. அவர் நேற்று கடைக்கு துணி வாங்க வந்தார். அதே போல் இன்றும் துணி வாங்க வந்ததாகக் கூறினார். அவர் தனது செல்போனை ஆன் செய்து பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசியமாக வைத்திருந்திருக்கலாம். கடையிலுள்ள யாரும் அது போல் செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்போனை எடுத்த அந்த பெண்ணை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.