வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (06/11/2021) இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன்படி, திருச்சி மாநகர் பகுதியான மலைக்கோட்டை, பாலக்கரை, தில்லை நகர், கே.கே.நகர், லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், செட்டிநாடு, கண்டனூர், புதுவயல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், பட்டாபிராம், குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, சென்னையின் பல இடங்களில் இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மரங்கள் விழுந்து, மழைநீர் சூழ்ந்தது.
கிண்டி ஒலிம்பியா அருகே சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வடபழனி, அசோக் நகர் பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.