Skip to main content

சுகாதாரத்துறை அமைச்சர் ஊரில் போலி மருத்துவர்- மருத்துவமனைக்கு சீல்!

Published on 25/10/2017 | Edited on 25/10/2017
சுகாதாரத்துறை அமைச்சர் ஊரில் போலி மருத்துவர்- மருத்துவமனைக்கு சீல்!

கடந்த சில நாட்களாக காய்ச்சல் இறப்புகள் நடக்கும் ஊர்களில் உள்ள மருந்துக்கடைகள், போலி மருத்துவமனைகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த அன்பு (6) என்ற சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதால் அந்த சிறுவனுக்கு முதலில் சிகிச்சை அளித்த மருந்துக்கடையை மருந்து ஆய்வுக்குழுவினர் பூட்டினார்கள்.

அதேபோல இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊரான இலுப்பூரில் சினேகா என்ற 12ம் வகுப்பு மாணவி காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவிக்கு மாத்திரை கொடுத்த மருந்துக்கடை உள்பட சில கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இலுப்பூர் பகுதிகளில் மருந்துகடைகளில் காலவதியான மருந்துக்கள் விற்கப்படுவதாகவும்.
போலி மருத்துவர்கள் மருத்துமனை நடத்துவதாகவும் செய்திகள் பரவியதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று இலுப்பூரில் இணை இயக்குநர் ராதிகா, துணை இயக்குநர் பரணிதரன் தலைமையில் இலுப்பூர் பகுதிகளில் அதிரடி
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் செல்வி மெடிக்கல் மற்றும் விநாயகா மெடிக்கல் ஆகிய இரண்டு மெடிக்கல்  உரிமையாளர்கள் மீது இலுப்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், போலி மருத்துமனை நடந்திவந்ததாக கூறப்படும் காஜாமைதீன் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் ஊரிலேயே காலாவதியான மருந்து, போலி மருத்துவமனை செயல்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்