தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 5,000 பேர் வீதம் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. ஒருபுறம் கரோனா பாதிப்பு அதிகரித்துவர மறுபுறம் தினக்கூலிகளில் இருந்து மாத வருமனமுடைய நடுத்தர குடும்பம் வரை வேலைகளுக்காகவும் வருமானத்திற்காகவும் பயணிக்கிறார்கள். அதேசமயம் வெளியே வருபவர்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் ஆகிய பாதுகப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம், கொக்கிரகுளத்தில் புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடையில் ஆறு ரூபாய்க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் குறைந்த நாட்களுக்கு விற்பனை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கரோனா அச்சம் சிறிதுமின்றி மிகக் குறைந்த விலையில் ஹெட்செட், டெம்பர் கிளாஸ் வாங்குவதற்காக அதிகளவில் கூட்டம் கூடினர். தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கட்டுபாடுகள் மீறி கூடியிருந்த மக்களை கலைந்துபோக செய்தனர். மேலும் கரோனா காலத்தில் இதுபோல் கூட்டம் கூட்டியதற்காக அக்கடைக்கு சீல் வைத்தனர்.