கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தோரணக்கல்பட்டி என்ற இடத்தில் கள்ளத்தனமாக டீசல் விற்பனை செய்வதாக வரப்பெற்ற தகவலின் பேரில் கரூர் மாவட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படையினர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு காவல் துறையினருடன் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது பதிவு எண் இல்லாத 25,000 லிட்டர் கொள்ளளவு உள்ள டேங்கர் லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு டீசல் நிரப்பிக்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த சரவணன் என்பவரை விசாரணை செய்ததில் லாரியில் சுமார் 5000 லிட்டர் பயோடீசல் உள்ளது என்றும் இதற்கு எவ்வித உரிமமோ, ஆவணங்களோ இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. மேலும், டேங்கர் லாரி கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
உரிமம் ஏதுமின்றி கள்ளத்தனமாக பயோடீசல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், லாரிகள் பயோடீசலுடன் பறிமுதல் செய்யப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளத்தனமாக பயோடீசல் விற்பனை செய்து பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பார்வையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.